Sunday, 20 October 2013

சண்டை படங்களில் நடிப்பது போல் ‘‘சூர்யா குடும்பப்பாங்கான கதைகளிலும் நடிக்க வேண்டும்’’-டைரக்டர் அமீர்



‘‘சூர்யா சண்டை படங்களில் நடிப்பது போல், குடும்பப்பாங்கான கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்க வேண்டும்’’ என்று சினிமா படவிழாவில் டைரக்டர் அமீர் கேட்டுக்கொண்டார்.
படவிழா
பார்த்திபன், விமல், விதார்த் இணைந்து நடித்து, கரு.பழனியப்பன் டைரக்டு செய்திருக்கும் படம், ‘ஜன்னல் ஓரம்.’ ஒரு பஸ் டிரைவரையும், கண்டக்டரையும் சுற்றி பின்னப்பட்ட கதையம்சம் உள்ள படம் இது. இந்த படத்தை ‘அடிதடி’ முருகன் தயாரித்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. பாடல்களை, நடிகர் சூர்யா வெளியிட்டார்.
விழாவில், ‘பெப்சி’ தலைவரும் டைரக்டருமான அமீர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–
குடும்ப படம்
‘‘சூர்யா தொடர்ந்து அதிரடியான சண்டை படங்களில் நடித்து வருகிறார். அவர், குடும்பப்பாங்கான கதையம்சம் உள்ள படங்களிலும் நடிக்க வேண்டும். அவருக்கு பெண் ரசிகைகள் அதிக அளவில் இருக்கிறார்கள். ‘வாரணம் ஆயிரம்’ படத்தை நான் மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்தபோது, இதை நேரில் உணர்ந்தேன்.
இந்தியில், தாரே ஜமீன்பர், 3 இடியட்ஸ் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் அமீர்கான் நடித்தது போல், இங்கே சூர்யா வித்தியாசமான குடும்ப படங்களில் நடிக்க வேண்டும். அவர் நடித்த ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம்தான் நான் டைரக்டராக அங்கீகரிக்கப்பட்டேன். மீண்டும் என் படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை.
கரு.பழனியப்பனிடம், ‘பாண்டிய வம்சம்’ என்று ஒரு கதை இருக்கிறது. அந்த கதையை சூர்யா கேட்க வேண்டும்.’’
இவ்வாறு அமீர் பேசினார்.
சூர்யா பதில்
அதற்கு பதில் அளித்து சூர்யா பேசியதாவது:–
‘‘கரு.பழனியப்பனிடம் உள்ள கதையை நான் நிச்சயமாக கேட்கிறேன். அவர் டைரக்டு செய்த பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம் ஆகிய இரண்டு படங்களும் டி.வி.யில் ஒளிபரப்பபடும்போதெல்லாம் நான் பார்க்கிறேன். பார்த்திபன் கனவு படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் ஜோதிகாவுக்குத்தான் வந்தது. அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதே என்று ஜோதிகா அடிக்கடி வருத்தப்படுவார்.
‘ஜன்னல் ஓரம்’ படத்தில், பல நடிகர்கள் இணைந்து நடித்து இருக்கிறார்கள். பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. நான், தொடர்ந்து சண்டை படங்களில் நடிக்கவில்லை. சிங்கம்–1, சிங்கம்–2 படங்களை பார்த்ததால் அதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. இடையில் 7–ம் அறிவு, மாற்றான் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறேன்.’’
மேற்கண்டவாறு சூர்யா கூறினார்.
கேயார்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கேயார் பேசும்போது, ‘‘இந்த படத்தில் சம்பந்தப்படாத சூர்யா, விஷால் ஆகிய 2 பிரபல நடிகர்களும் விழாவுக்கு வந்து இருக்கிறார்கள். இது, ஆரோக்கியமான விஷயம். சினிமாவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். மற்ற நடிகர்–நடிகைகளும் இதை பின்பற்றினால், சினிமா இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்றார்.
நடிகர்கள் விஷால், விமல், விதார்த், ரமணா, ராஜேஷ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர்கள் டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர்கள் டி.சிவா, கே.ஈ.ஞானவேல்ராஜா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், பிலிம்சேம்பர் பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், பட அதிபர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன், சித்ரா லட்சுமணன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, செயலாளர் ‘கலைப்புலி’ ஜி.சேகரன், டைரக்டர்கள் எழில், சமுத்திரக்கனி, எஸ்.பி.ஜனநாதன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.


No comments:

Post a Comment