Sunday, 27 October 2013

கோச்சடையான் என்னை புறக்கணிக்கவில்லை: கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் சவுந்தர்யாவுக்கு உறுதுணையாக இருந்தவர் கே.எஸ்.ரவிகுமார், திரைக்கதை வசனத்தை எழுதிக் கொடுத்தவரும் அவர்தான்.
அதன்பிறகு சவுந்தர்யாவுக்கும், கே.எஸ்.ரவிகுமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரவிகுமார் படத்தைவிட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. அதன் பிறகு இயக்குனர் மாதேஷ் சவுந்தர்யாவுக்கு உதவி செய்து வருகிறார்.
படத்தின் புரமோசன்களிலும், விளம்பரங்களிலும் கே.எஸ்.ரவிகுமாரின் பெயர் புறக்கணிக்கப்படுவதாகவும், இதனால் ரவிகுமார் கவலை அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதனை கே.எஸ்.ரவிகுமார் மறுத்துள்ளார்.
டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார் நடிக்கும் சங்கராபுரம் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரவிகுமார் இதுபற்றி கூறியதாவது: கோச்சடையானில் இருந்து நான் புறக்கணிக்கப்படுவதாக சொல்கிறார்கள். என் மனசாட்சி அறிந்த வரையில் நான் புறக்கணிக்கப்படவில்லை, புறக்கணிக்கவும் முடியாது. அதற்கான அவசியமும் இல்லை.
காரணம் படத்தின் எல்லா வேலையும் முடிந்து விட்டது. முதலில் நான்தான் கோச்சடையானை இயக்குவதாக இருந்தது. ஏற்கெனவே சுல்தான் தி வாரியர் டிராப் ஆனதில் வருத்தமாக இருந்தார் சவுந்தர்யா, மேலும் என்னை விட அவருக்கு டெக்னிக்கல் அறிவு அதிகம் என்பதால் நான்தான் சவுந்தர்யாவை டைரக்ட் செய்யச் சொன்னேன். அப்படி இருக்கும்போது எப்படி என்னை அவர் புறக்கணிப்பார்.
பலரும் என்னை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது. ஒரு பெரிய மனிதர் என்னை போனில் தொடர்பு கொண்டு ரஜினிக்கும் உங்களுக்கும் பிரச்னையாமே என்று கேட்டபோது நான் ரஜினி அருகில் இருந்தேன். அவரிடம் ரஜினியை பேசச் சொன்னேன். எனவே இதுபோன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். கோச்சடையான் மீது எனக்கு கோபமும் இல்லை. கோச்சடையான் என்னை புறக்கணிக்கவும் இல்லை. இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் பேசினார்.

No comments:

Post a Comment