நடிகைகள் தாங்கள் நடிக்கும் படத்தின் புரொமோஷன் நடவடிக்கைளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்துவதற்காக, அவர்களது 20 சதவீத சம்பளத்தை நிறுத்திவைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த முடிவை நடைமுறைக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் தெரிவித்தார்.
புதிய திரைப்படங்களின் ஆடியோ வெளியிட்டு விழா, டிவி நிகழ்ச்சி உள்ளிட்ட புரொமோஷன் நடவடிக்கைகளில் சில நடிகைகள் பங்கேற்க மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் 'கோலாகலம்' என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், நடிகை சரண்யா மோகன் பங்கேற்க மறுத்துவிட்டார்.
அதே விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகை காஜல் அகர்வால் வருவதாகச் சொன்னதாகவும், கடைசியில் தனது மேனேஜரின் பேச்சைக் கேட்டு வரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இதேபோல் நடிகைகள் சிலர், புதிய படங்களில் புரொமோஷன் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். முடிவில், ஒரு படத்தின் புரோமோஷன் நடவடிக்கைகள் முடியும் வரை, நடிகைகளின் சம்பளத் தொகையில் 20 சதவீதத்தை நிறுத்தி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் தெரிவித்தார்.
இது தொடர்பாக, நடிகர் சங்கத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு, தயாரிப்பாளர் சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
No comments:
Post a Comment