Sunday, 20 October 2013

மக்களுக்கு நான் ஏதாவது செய்யணும்! - கார்த்தி

ஆக் ஷன் களத்தில் அதிரடியான வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா . இன்னொரு பக்கம் அமைதியாக வெற்றிகளை அள்ளிவிடுகிறார் கார்த்தி. பாக்ஸ் ஆபீஸின் விருப்பத்துக்குரிய அண்ணன்- தம்பி மாஸ் ஹீரோக்களாக வலம் வரும் இவர்கள், ஆந்திர சினிமாவிலும் மோஸ்ட் வாண்டட் நட்சத்திரங்கள். ஆக் ஷன், லவ், சென்டிமெண்ட் என்று கலவையான மாஸ் மசாலா ரசனையின் அடையாளமாக வலம் வந்தாலும், இவர் கல்லா கட்டும் ரகளையான ஏரியா நகைச்சுவை. இன்னொரு பக்கம் சமூக விழிப்புணர்வுக்காகப் பிரச்சாரம் செய்யும் பிரபலமாகவும் (cause ambassador) இருக்கிறார்.
கமலுக்குப் பிறகு தனது ரசிகர்களை ‘மக்கள் நல மன்றம்’ என்ற சமூக சேவை அமைப்பாக ஒருங்கிணைத்திருக்கும் கார்த்தி ‘தி இந்து’ நாளிதழுக்காகப் பிரத்தியேகமாக அளித்த பேட்டி இது. தி இந்து செய்தியாளர் ஜெயந்தனுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:
மாஸ் ஹீரோ வட்டத்துக்குள்ள வந்த பிறகு, கத்துகிட்ட விஷயங்கள்?
அமீர் சார் போட்டுக்கொடுத்த பாதை இது! அந்த ஒரு படத்துலயே பட்டி தொட்டிவரைக்கும் போய் சேர்ந்திட்டேன். அப்படிப் பார்த்தா முதல் படத்துலயே நான் மாஸ் ஹீரோதான். ஆனா பருத்திவீரன்னா ஒருத்தன்தானே இருக்க முடியும்.
எட்டுப் படங்கள்தான் வந்திருக்கு... ஆனா நம்ம மக்கள் எனக்கு கொடுத்திருக்க உயரத்துக்கு தலை வணங்குறேன். கார்த்தி நீங்க இப்படி நடிக்கலாமான்னு பக்கத்துல வந்து கையப் பிடிச்சுக்கிட்டு உரிமையா கண்டிக்கிறாங்க. இனிமே நாம இருக்குற படத்துல, தப்பா எதுவுமே வந்துடக் கூடாதுன்னு! என்னோட படத்துல வல்கர் இருக்கக் கூடாது, ஃபேமிலி ஆடியன்ஸ் முகம் சுளிக்கிற மாதிரி இருக்கக் கூடாதுன்னு கத்துகிட்டு இருக்கேன்.
உங்க பக்கத்து வீட்டுக்காரர் ஷங்கரை சந்திக்கிறது உண்டா?
தீபாவளி அன்னைக்கு பட்டாசு வெடிக்கிறதுல எங்களுக்கும் அவருக்கும் பெரிய போட்டி நடக்கும். கடைசியில அவர்தான் ஜெயிப்பார். படப்பிடிப்பு இல்லாத சமயத்துல அவர் மகன் அர்ஜித்கூட ஷட்டில் காக் விளையாடுவோம்.
பிரியாணி வாசம் மூக்கை துளைக்குதே?
இந்தப் பெருமையெல்லாம் வெங்கட் பிரபு வுக்குத்தான். அவர் என்னோட ஸ்கூல் மேட். இயல்பாவே கூலான ஆள். இவர் அளவுக்கு ஜாலியான மனசுக்காரங்க ரொம்பக் குறைவு. அவர் சொன்ன கதை என்னை சட்டுன்னு கேச் பண்ணிடுச்சு. கதை கேட்டதும் ஃபுல் பிளேட் பிரியாணி சாப்பிட்ட மாதிரி ஒரு கிக்!
ரொம்ப ஜாலியான த்ரில்லர் இந்தப் படம். இதைவிட உற்சாகமா விசிலடுச்சு சொல்ல வேண்டிய விஷயம், யுவனுக்கு இது நூறாவது படம். பையாவுக்குப் பிறகு ரொம்ப ஃபிரெஷ்ஷா ஒரு புதுக் கார்த்திய இந்தப் படத்துல பார்க்கலாம். கண்டிப்பா பிரியாணி எல்லாருக்கும் சுவையா இருக்கும். பொங்கல் பண்டிகைக்கு பிரியாணி போட ரெடியாகிட்டு இருக்கோம்.
ஆல் இன் அழகுராஜான்னு சொன்னாலே அது கவுண்டமணியோட பிராண்ட் ! பிரபல காமெடியன் கேரக்டர் பேர்ல ஒரு ஹீரோ நடிக்கிறது புதுசா இருக்கே?
பெரிய கொடுப்பினை வேணும் பாஸ்! கவுண்டமணி ஒரு எவர்கிரீன் லெஜெண்ட். அவர் நடிச்ச காட்சிகள் இன்னைக்கும் அப்படியே புதுசா இருக்கு. யாரையும் காப்பி பண்ணாத நிஜக் கலைஞர். நான் அவரோட தீவிர ரசிகன். ஆல் இன் ஆல் அழகுராஜாவ தலைப்பா பயன்படுத்துறதால கவுண்டமணி சாரிடம் ஆசி வாங்கப் போனேன். தாராளமா பயன்படுத்துங்கன்னு வாழ்த்தினார். இன்னைக்கு சினிமா பத்தி அப் டூ டேட்டா இருக்கார்.
என்ன மாதிரி படம் இது?
ஃபேமிலி ரொமாண்டிக் காமெடி. சின்ன நகரங்கள்ல வாழ்க்கையை யதார்த்தாம எதிர்கொள்ற குடும்பங்கள் நிறைய இருக்கு. அந்த ஊரும் அமைதியா, சந்தோஷமா இருக்கும். அப்படியொரு ஊரும் குடும்பமும்தான் என்னோடது. இப்படி ஒரு ஊர்ல நாம குடியிருக்கக் கூடாதான்னு ஏங்க வைக்கப் போற படம். இயக்குநர் ராஜேஷ் காமெடி, சென்டிமெண்டை விடாமா, க்யூட்டா ஒரு லாங் ஜம்ப் பன்ணியிருக்கார்.
அட்டக்கத்தி ரஞ்சித் கூட அடுத்த படம்?
குடிசை மாற்று வாரியக் குடியிருப்புல வாழ்ற ஒரு சென்னை இளைஞனா நடிக்கிறேன். ஆளே மாறப்போறேன். இது சென்னையோட ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையச் சொல்ற படம். இந்தப் படத்துக்காக கால்பந்து கத்துகிட்டு இருக்கேன். இந்தப் படத்துல நிறைய நவீன நாடகங்கள்ல நடிச்ச இளைஞர்கள் நடிக்கிறாங்க. ரொம்ப ராவான படமா இருக்கும். அட்டக்கத்தி படத்தோட தொழில்நுட்பக் கலைஞர்கள், இதுல அப்படியே இருக்காங்க. இது நம்ம கார்த்தி தானான்னு ஆச்சர்யமா இருக்கும். என்னோட கேரியர்லயும் முக்கியமான படமா இருக்கும். இந்தப் படத்துக்காக, மொத்தப் படத்தையும் ஒருமுறை நடிச்சுப் பார்க்கப் போறோம்.
ஒரு பக்கம் கமர்ஷியல் விளம்பரம். இன்னொரு பக்கம் விழிப்புணர்வு பிரச்சாரம்னு கலக்குறீங்களே?
நமக்கு புகழும் பணமும் கிடைக்கக் காரணமான மக்களுக்கு ஏதாவது செய்யணும். அதுக்காகத்தான் நானே வலியப் போய் காஸ் அம்மாசடரா இருக்கேன். எனக்கு சைக்கிள் ஓட்டுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். காலையில அஞ்சரை மணிக்கு, என்னையும் ஜீவாவையும் ஹெல்மெட் தலையோட ஆழ்வார்பேட்டை ஏரியால சைக்கிள்ல பார்க்கலாம். வாரத்துல ஒருநாள் சைக்கிள்லதான் ஆஃபீஸ் வரணும்னு தமிழ்நாட்டுல சட்டம் போடணும். 365 நாட்கள்ல ஒரு 100 நாளாவது சைக்கிள் ஓட்டினா, நோ ஹார்ட் அட்டாக்! இங்கே சைக்கிள் மாரத்தான் நடத்துறாங்கன்னு கேள்விப்பட்டு நானே வாலண்டியரா போய் கலந்துகிட்டேன்.
அப்புறம் லைசோமால் ஸ்டோரேஜ்ன்னு, நிறைய குழந்தைகள் பிறக்கும்போதே தைராய்டு பிரச்சினையோட பிறக்கறாங்க. குழந்தை பிறந்த நான்கு மாசத்துல இதைக் கண்டுபிடிச்சு ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டா, பல நோய்கள் அவங்களை தாக்காம இருக்கும். இதை பிரச்சாரம் பண்ண தொண்டு நிறுவனங்களோட கைகோத்திருக்கேன்.


No comments:

Post a Comment