என்னை டாப்புக்கு கொண்டு வந்தவர்கள் என்னை அங்கே தனியாக விட்டுவிட்டார்கள் என்று ரஜினி உருக்கமாக கூறினார். சென்னையில் நேற்று துவங்கிய சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: சாதாரண மனுஷனா இருந்த என்னை பெரிய ஆளாக்கிய கே.பி.சாருக்கு என்னோட நன்றியை சொல்லிக்கிறேன். என்னை வளர்த்த புரட்யூசருங்க, டெக்னீஷின்ங்க, டைரக்டருங்க, டிஸ்ட்ரிபியூட்டருங்க, தியேட்டர் ஓனர்ஸ் அத்தனை பேருக்கும் நன்றி. சமூகத்துல பெரிய ஆளா என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. இது சினிமா எனக்கு போட்ட பிச்சை.
38 வருஷமா சினிமால இருக்கேன். நடிப்பைத் தவிர வேறெதுவும் தெரியாது. வேற ரெண்டு மூணு விஷயங்கள்ல இறங்கிப் பார்த்தேன் ஜெயிக்க முடியல. சினிமாவுல வில்லனா இருந்த என்னை காமெடியனாக்கினார் கேபி சார். ஆறிலிருந்து அருபது வரை படத்துல நடிகனாக்கினாரு முத்துராமன் சார், முள்ளும் மலரும் படத்துல இயல்பா நடிக்க வச்சாரு மகேந்திரன் சார்.
பாட்ஷா படத்தின் மூலமா என்னை எங்கேயோ கொண்டு போனாரு சுரேஷ் கிருஷ்ணா சார், முத்து, படையப்பா, கோச்சடையான்ல கே.எஸ்.ரவிகுமாரும், சந்திரமுகில பி.வாசும் என்னை டாப்புல கொண்டுபோய் விட்டாங்க. என்னை டாப்புக்கு கொண்டு வந்தவங்க எல்லாரும் போய்ட்டாங்க. நான் மட்டும் தனியாக நிக்குறேன். டாப்புக்கு போனா இதுதான் பிரச்னை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ்னு அடிக்கடி நினைச்சுக்குவேன்.
நமக்கு முன்னாடி சினிமால இருந்த ஜாம்பவான்கள் சமைச்சுப்போட்ட சாப்பாட்டைத்தான் நாம வேற வேற விதமா சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். 10 வயசுல அவ்வையார் படம் பார்த்தேன். அதான் நான் பார்த்த முதல் படம். இப்போ அவ்வையார் பார்த்தாலும் பிரமிப்பா இருக்கு.
அவ்வையார், சந்திரலேகா, நாடோடி மன்னன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் எல்லாமே காவிய படங்கள். அவற்றை படைத்து விட்டு அமரராகிவிட்டவங்க காலடியில புஷ்பாஞ்சலி செலுத்துறேன். இதுமாதிரி படங்களை நம்மால கொடுக்க முடியலைங்ற ஆதங்கம் எனக்கு இருக்கு.
இவுங்க வரிசையில இப்போ இருக்கிற மகான் கமல். அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் மாதிரியான படங்களை அவரால மட்டும்தான் கொடுக்க முடியும். அவரை தவிர வேறு எந்த நடிகராலும் கொடுக்க முடியாது. அப்பவும், இப்பவும் சினிமாவுல தயாரிப்பாளர்கள் தான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. சினிமால ஜெயிச்சவங்க வாழ்க்கையில தோத்திருக்காங்க.
வாழ்க்கையிலதோத்தவங்க சினிமால ஜெயிச்சிருக்காங்க. இது ஒரு அபூர்வ உலகம், மாயா பஜார். இப்போ வருகிற இளம் நடிகர்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்க ஆசைப்படுறேன். முதல்ல பொருளாதார ரீதியா உங்களை சரிப்படுத்திக்குங்க. அதுக்கு பிறகு சினிமால என்ன வேணாலும் பண்ணுங்க.

No comments:
Post a Comment